கடலூரில் ஜமாபந்தி நிறைவு விழா: 1,232 பேருக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

கடலூரில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 1,232 பேருக்கு ரூ.1 கோடியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2022-06-30 16:06 GMT

கடலூரில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 1,232 பேருக்கு ரூ.1 கோடியே 11 லட்சத்து 6 ஆயிரத்து 842 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) வாயிலாக பொதுமக்களிடம் இருந்து உதவித்தொகை, பட்டா மாற்றம், குடும்ப அட்டை, பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது. அவை சம்பந்தப்பட்ட துறை ரீதியான அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, அனைத்து மனுக்களையும் தீர ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தி மூலம் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டு, தற்போது பல்வேறு துறைகளின் மூலமாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தூய்மையான மாநகராட்சி

மேலும் முதல்-அமைச்சரின் சீரிய நடவடிக்கையால் ஓராண்டு காலத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளது. அதன்படி கடலூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது தேவையான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாகவும், வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார். இதில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் ராஜா, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, சங்கீதா, பிரசன்னா, கல்விக்குழு தலைவர் ராஜ்மோகன், கவுன்சிலர்கள் செந்தில்குமாரி இளந்திரையன், சுதா அரங்கநாதன், விஜயலட்சுமி செய்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் பூபாலசந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்