மலை கிராமங்களுக்கு ரூ.1½ கோடியில் தார் சாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்
ஊசூர் பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு ரூ.1½ கோடியில் அமைக்கப்பட்ட தார் சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஊசூர் பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு ரூ.1½ கோடியில் அமைக்கப்பட்ட தார் சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மலை கிராமங்கள்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஊசூர் அருகே குருமலை என்ற மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி வெள்ளைக்கல் மலை, பள்ளக்கொல்லை மற்றும் நச்சிமேடு ஆகிய மலை குக்கிராமங்களும் உள்ளது. இந்த 4 மலை ராமங்களிலும் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் ஊசூர், அத்தியூர், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கூலி வேலை செய்கின்றனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இந்த மலைவாழ் மக்களுக்கு இதுவரை சாலை வசதி அமைத்து தரப்படாமல் இருந்தது.
குருமலையில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் 8-–ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புக்கு ஊசூர் மற்றும் அணைக்கட்டு பகுதிக்குதான் வரவேண்டும். சாலை வசதி குறைபாட்டால் அவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை வாகனத்தில்கூட அழைத்துச் செல்ல முடியாத சூழலில் டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவல நிலையும் தொடர்ந்தது.
முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
எனவே பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் குருமலை பகுதிக்கு சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2018-2019-ம் நிதி ஆண்டில் ரூ.1.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குருமலை மலை கிராமம் வரை சாலை அமைக்கப்பட்டது.
இதனைத் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் ஜெய்சங்கர், ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் மற்றும் கிராம மக்கள் மலர்தூவி வரவேற்றனர். மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதை தொடர்ந்து மலைவாழ் மக்கள் சாலையில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தனர்.