ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.1½ கோடி நிலம் மோசடி - தனியார் நிறுவன ஊழியர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-29 07:22 GMT

சென்னை ராயப்பேட்டை அங்கமுத்து தெருவை சேர்ந்தவர் சுப்புராயுடு (வயது 63). இவர் காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதனந்தபுரம் கிராமம், மாதா நகரில் 3,474 சதுர அடி கொண்ட நிலத்தை கடந்த 1996-ம் ஆண்டு ராணி என்பவரிடத்தில் இருந்து கிரையம் பெற்று அனுபவத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் சுப்புராயுடு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவர் வாங்கி வைத்திருந்த இடத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருப்பவர்கள் நீங்கள் இடத்தை விற்று விட்டீர்களே, மீண்டும் எதற்காக வந்து பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்புராயுடு நான் என்னுடைய இடத்தை யாருக்கும் விற்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சுப்புராயுடு குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று வில்லங்கச்சான்று எடுத்து பார்த்துள்ளார். அதில், சுப்புராயுடுக்கு சொந்தமான 3,474 சதுர அடி கொண்ட நிலம் வித்யா மற்றும் கீதா ஆகியோர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சுப்புராயுடு ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, கூடுதல் காவல் துணை போலீஸ் கமிஷனர் முத்துவேல்பாண்டி, உதவி கமிஷனர் பொன்சங்கர் ஆகியோர் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சென்னை அனகாபுத்தூர் எம்.ஜி.ஆர்.நகர் 1-வது தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான தியாகு (38) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு சுப்புராயுடு என்ற பெயரில் போலியான ஆவணம் தயாரித்து தியாகு என்ற பெயருக்கு பவர் எழுதி கொடுத்ததை போன்று குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியான பொது அதிகார பத்திரம் எழுதி கொடுத்ததும், அதை வைத்து வித்யா என்பவருக்கு 1,900 சதுர அடியும், கீதா என்பவருக்கு 1,574 சதுர அடியும் பிரித்து விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட தியாகுவை நேற்று கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி 50 லட்சம் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்