மருத்துவமனையில் ரூ.1½ கோடி மோசடி; தம்பதி மீது வழக்கு

மருத்துவமனையில் ரூ.1½ கோடி மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2023-10-13 20:40 GMT

திருச்சி தில்லைநகர் 5-வது கிராஸ் கோட்டை ரெயில் நிலைய ரோட்டில் தனியார் மருத்துவமனை மற்றும் மெடிக்கல் உள்ளது. இந்த மெடிக்கலில் உறையூர் செட்டிப்பேட்டை தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 72) காசாளராக கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அந்த மருத்துவமனை மற்றும் மெடிக்கலில் நோயாளிகள் நேரடியாகவும், ஏ.டி.எம். கார்டு மூலமாகவும் பணத்தை செலுத்தி வந்தனர். இந்தநிலையில் சுப்பிரமணியன் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த மாதம் 7-ந் தேதி வரையுள்ள காலகட்டத்தில் நோயாளிகள் செலுத்திய தொகையை மருத்துவமனை கணக்கில் வரவு வைக்காமல் மருத்துவமனையின் ஏ.டி.எம். கார்டு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி ரூ.1½ கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, அவர் ரூ.1 லட்சத்தை மட்டும் ரொக்கமாக கொடுத்ததாகவும், மீதித்தொகையை தருவதாக கூறிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து டாக்டர் சொக்கலிங்கம் அளித்த புகாரின்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தி, சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி சந்திரா என்ற வள்ளியம்மை (62) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்