சைதாப்பேட்டையில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த ரவுடி கைது
சென்னை சைதாப்பேட்டையில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை சைதாப்பேட்டை, கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 43). இவர் கடந்த 12-ந்தேதி இரவு சைதாப்பேட்டை கூத்தாண்டவர் தெருவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், பூங்கொடி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச்சங்கிலி, 2 பவுன் சிறிய தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்தார். அதில் நிலை தடுமாறி பூங்கொடி அலறியபடி கீழே விழுந்த நிலையில் சற்று தூரம் சாலையில் இழுத்து செல்லப்பட்டார். அப்போது எதிரில் அந்த நேரத்தில் ஆட்டோ ஒன்று, பூங்கோடி மீது மோதுவது போல வந்து அவரை உரசியபடி நின்றது.
இந்த சந்தடி சாக்கில் பூங்கொடி கழுத்தில் கிடந்த தாலி சங்கிலி மற்றும் சிறிய சங்கிலி ஆகிய இரண்டையும் பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். நகையை இழந்த பூங்கொடி சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அந்த காட்சி வீடியோ காட்சியாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. கேமரா காட்சி அடிப்படையில் போலீசார் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள் கொள்ளையனை உடனயாக கைது செய்தனர். அந்த கொள்ளை ஆசாமியின் பெயர் ஹக்கீம் (வயது 24). சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொள்ளை அடித்த தங்க சங்கிலிகளை, தனது நண்பர் மணிகண்டனிடம் ஹக்கீம் கொடுத்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.