கரடு, முரடாக காட்சி அளிக்கும் சாலைகள்

சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் சாலைகள் கரடு, முரடாக காட்சி அளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

Update: 2023-01-22 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் சாலைகள் கரடு, முரடாக காட்சி அளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

திட்டை சாலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் திட்டை சாலை உள்ளது.

இந்த சாலையை திட்டை, பசும்பொன் முத்துராமலிங்கம் தெரு, தஷ்ணாமூர்த்தி நகர், கற்பகம் நகர், ஐம்பொன் நகர், சின்னத்தம்பி நகர், ஆனந்தம் நகர், முருகையா நகர், குளங்கரை, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், செம்மங்குடி, சிவனார்விளாகம், அண்ணா நகர், பொதிகை நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குண்டும், குழியுமாக...

இந்த சாலை வழியாக தினமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் இந்த சாலை சின்னத்தம்பி நகர் முதல் திட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சி நகர் வரை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. கரடு, முரடாக காட்சி அளிக்கும் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சாலை ேமாசமான நிலையில் இருப்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு அவசர தேவைக்கு ஆட்டோ, வாடகை கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி வர டிரைவர்கள் மறுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சேதம் நடந்த சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கொள்ளிடம்

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் இருந்து செங்கமேடு செல்லும் 2 கிலோ மீட்டர் தூர சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச் சாலையாக மாற்றப்பட்டது.

இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சிதறி கிடக்கும் கற்கள் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். பலர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர். எனவே செங்கமேடு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்