செடிகளில் அழுகும் தக்காளிகள்; குப்பையில் கொட்டப்படும் அவலம்

தொடர் மழையின் காரணமாக செடிகளில் தக்காளிகள் அழுகி வருகின்றன. இதனால் குப்பையில் கொட்டப்பட்டு வருகின்றன.

Update: 2022-10-21 18:45 GMT

பொள்ளாச்சி, 

தொடர் மழையின் காரணமாக செடிகளில் தக்காளிகள் அழுகி வருகின்றன. இதனால் குப்பையில் கொட்டப்பட்டு வருகின்றன.

குப்பையில் கொட்டப்படும் தக்காளி

பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம், ஆனைமலை, கிணத்துக்கடவு, வடக்கிபாளையம் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட், தேர்நிலை திடல், திரு.வி.க. மார்க்கெட்டிற்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மேலும் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளும் தக்காளிகளை வாங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி செடியிலேயே அழுகி விடுகிறது. மேலும் பெட்டியில் போட்டு மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் போது சேதம் அதிகமாகி விடுகிறது. இதனால் காந்தி மார்க்கெட்டில் குப்பையில் அழுகிய தக்காளிகள் கொட்டப்பட்டு வருகின்றன. வரத்து குறைவால் விலையும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

தக்காளி சேதம்

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டிற்கு தற்போது சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், உடுமலையில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து கொண்டு வருவதற்கு வாடகை அதிகம் என்பதாலும், ஒரே விலை என்பதால் அங்கிருந்து தக்காளி வருவதில்லை. இதற்கிடையில் தற்போது மழை பெய்து வருவதால் தக்காளியில் அதிகமாக சேதம் ஏற்படுகிறது. வழக்கமாக ஒரு பெட்டிக்கு 2 கிலோ தக்காளி சேதமாகும். மழையினால் தற்போது 5 கிலோ வரை சேதமாகி வருகிறது.

இதனால் தக்காளியை மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மழை பெய்து வருவதால் தக்காளி வரத்தும் குறைந்து வருகிறது. மழைக்கு முன்பு மார்க்கெட்டிற்கு 5 ஆயிரம் பெட்டிகளில் தக்காளி கொண்டு வரப்பட்டது. தற்போது 2 ஆயிரம் பெட்டிகளில் தான் தக்காளி வருகிறது. 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனை ஆகிறது. தொடர்ந்து மழை பெய்தால் வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்