கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 25 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்
தர்மபுரியில் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 25 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்்பாக 3 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கடைகளில் சோதனை
தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒகேனக்கல்லில் விற்பனைக்கு வைத்திருந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் தர்மபுரியில் உள்ள மீன் மார்க்கெட், பென்னாகரம் சாலை மற்றும் சந்தைப்பேட்டை பகுதிகளில் அமைந்துள்ள மீன் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது 3 கடைகளில் அழுகிய மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
25 கிலோ மீன்கள் பறிமுதல்
இதையடுத்து 3 கடைகளில் இருந்தும் 25 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. தரமற்ற மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.