ரூட் தல: கல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை
ரூட் தல பெயரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
சென்னை பெருநகர காவல் ஆணையர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அனைத்து கல்லூரிகளும் தற்போது திறந்துள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணித்து வரப்படுகிறது. மேலும், கல்லூரி மாணவர்கள் செல்லும் முக்கிய பஸ் மற்றும் ரெயில் வழித்தடங்களிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வன்முறை அல்லது அடிதடி சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
ஆகவே, ரூட் தல என்ற பெயரில் வன்முறை, மோதல் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள், பஸ்டே என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள், பஸ் மற்றும் ரெயில்களில் சாகசம் என்ற பெயரில் படிகளில் தொங்கியபடியும், பேருந்து மேற்கூரைகளின் மீது ஏறி பயணம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.