3 இடங்களில் ரூ.51 கோடியில் கூரை செட்டுகள்

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் நனையாமல் பாதுகாக்க ரூ.51 கோடியில் கூரை செட்டுகள் அமைக்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-09-08 17:32 GMT

திருப்புவனம்,

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் நனையாமல் பாதுகாக்க ரூ.51 கோடியில் கூரை செட்டுகள் அமைக்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

திருப்புவனம் தாலுகா ஏனாதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை பாதுகாத்து வைக்க கூரை செட்டுகள் அமைப்பதற்கு நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்பு அவர் கூறியதாவது:- விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடவும், அதிக லாபம் ஈட்டிடும் வகையிலும் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் நெல்லை கொள்முதல் செய்யவும், பருவமழை காலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் கான்கிரீட் தளத்துடன் கூடிய கூரை செட்டுகள் அமைக்கப்படுகிறது.

கூரை செட்டுகள்

அதன்படி காரைக்குடி தாலுகா பள்ளத்தூரில் 40 ஆயிரம் டன் கொள்ளளவில் ரூ.29.18 கோடி மதிப்பீட்டிலும், மானாமதுரை தாலுகா சிப்காட் நவீன அரிசி ஆலை வளாகத்தில் 15000 டன் கொள்ளளவில் ரூ.16.25 கோடியிலும், திருப்புவனம் தாலுகா ஏனாதியில் 6000 டன் கொள்ளளவில் ரூ.6.34 கோடியிலும் என மொத்தம் 3 இடங்களையும் சேர்த்து மொத்தம் 61 ஆயிரம் டன் கொள்ளளவிற்கு நெல்லினை பாதுகாத்து வைப்பதற்கு ரூ.51.77 கோடி மதிப்பீட்டில் கூரை செட்டுகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

தொடர்ந்து பொது வினியோக திட்டத்தில் செயல்பட்டு வரும் பூவந்தி, அரசனூர், முத்துப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் செயல்படும் ரேஷன் கடைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொருட்களின் இருப்பு, தரம், எடையளவு மற்றும் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்