பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி தஞ்சம்

மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தனர்.;

Update:2022-05-26 23:37 IST

மன்னார்குடி:

மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

காதல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த திருமக்கோட்டை மகாராஜபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது27).என்ஜினீயரான இவர், அதே பகுதியில் காய்கறி கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (22).முதுநிலை 2-ம் ஆண்டு பட்டபடிப்பு படித்து வருகிறார்.இவர்கள் 2 பேரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பவித்ராவிற்கு அவரது பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து இன்று (வெள்ளிக்கிழமை) நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, காதலர் விக்னேசுடன் தஞ்சையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு சென்றுள்ளனர். அப்போது திருமக்கோட்டை மன்னார்குடி போலீஸ் சரகத்தில் வருவதால் தஞ்சை போலீசார், மன்னார்குடி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அவர்களை அனுப்பிவைத்தனர்.

இதை தொடர்ந்து மன்னார்குடி தாலுகா போலீசார் இருவரின் பொற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருவரது பெற்றோரும் அவர்களை ஏற்றுகொள்ளவில்லை. காதலர்கள் இருவருக்கும் சட்டபூர்வ திருமண வயது உள்ளதால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்்கூடாது என இருவரது பெற்றோரிடமும் உறுதிமொழி வாங்கி கொண்டு காதல் திருமண ஜோடியை அவர்களை விருப்பப்படி போலீசார் தஞ்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்