பழனி மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை; குடிநீர் குழாய்கள் சேதம்

பழனி மலையில் இருந்து நேற்று பாறை உருண்டு விழுந்தது. இதில், மலைக்கோவிலுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன.

Update: 2023-05-19 21:00 GMT

பழனி மலையில் இருந்து நேற்று பாறை உருண்டு விழுந்தது. இதில், மலைக்கோவிலுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன.

பாறை உருண்டு விழுந்தது

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. பாலாறு-பொருந்தலாறு அணை பகுதியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பழனி மலை அடிவார பகுதியில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. பின்னர் தெற்கு கிரிவீதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலம் மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பழனி பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை பழனி மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு விழுந்தது. அப்போது அந்த பாறை எதிர்பாராதவிதமாக மலைக்கோவிலுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் மீது மோதி நின்றது. பாறை உருண்டு விழுந்ததில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. மேலும் அதில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அசம்பாவித சம்பவம்

அப்போது உருண்டு விழுந்த பாறையை உடைத்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு குடிநீர் குழாய்கள் உடைப்பையும் சீரமைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறும்போது, பழனி மலையில் பாறை உருண்டு விழுந்து, குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இருப்பினும் அவை உடனடியாக சீரமைக்கப்பட்டது. இதற்கு முன்பு இதுபோன்று பழனி மலையில் பாறை உருண்டு விழுந்த சம்பவம் நடைபெறவில்லை. தற்போது இந்த சிறிய பாறை, பெரிய பாறை இடுக்குகளில் இருந்து உருண்டு விழுந்திருக்கலாம். அதிர்ஷ்டவசமாக குடிநீர் குழாய் மீது மோதியதால் பாறை அங்கேயே நின்றுவிட்டது. அவ்வாறு மோதாமல் இருந்தால் கீழே உருண்டு வந்திருக்கும். இருப்பினும் மலையை சுற்றிலும் சுற்றுச்சுவர் உள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்பில்லை. எனினும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்