கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் இன்றி சுத்தம் செய்ய 'ரோபோ' சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு

கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் இன்றி சுத்தம் செய்ய 'ரோபோ' கருவியை சென்னை ஐ.ஐ.டி கண்டு பிடித்து உள்ளது.

Update: 2022-06-09 22:19 GMT

சென்னை,

இந்தியாவில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிப்பதற்காக சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால், 'ஹோமோசெப்' ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது. இது தற்போது களப் பணிக்குத் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மொத்தம் 10 எந்திரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களைக் கண்டறிவது தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தொடர்பு கொண்டு உள்ளனர். குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில், எந்திரப் பொறியியல் துறை ஆசிரியர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் ரோபோவை உருவாக்கி உள்ளனர். தூய்மைப் பணியாளர்களே ஆபரேட்டர்களாக பணியாற்றுவார்கள். ரோபோவை முழுமையாக கையாளவும், இயக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஒழிக்க முடியும்

இத்திட்டத்தின் முதன்மைத் திட்ட ஆய்வாளரும், சென்னை ஐ.ஐ.டி. எந்திர பொறியியல் துறையின் ஆசிரியருமான பேராசிரியர் பிரபு ராஜகோபால் கூறும்போது, ஹோமோசெப் திட்டம் தனித்துவம் வாய்ந்தது. எங்கள் முயற்சி ஒரு உத்வேகமாக இருக்கும் என நம்புகிறோம் என்றார்.

தொடக்கநிலை பங்குதாரரான சொலினாஸ் இண்டக்ரிட்டி-யின் தயாரிப்புத் தலைமை அதிகாரி பாவேஷ் நாராயணி கூறும்போது, 'ஆய்வகத் தயாரிப்பில் இருந்து உண்மையான கழிவுநீர்த் தொட்டியில் ஈடுபடுத்தக் கூடிய ஒரு ரோபோ தயாரிப்பாக மாற்றித் தருவதற்கான பாதை சிரமங்கள் நிறைந்ததாகும்.

தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு இதனை வடிவமைக்க எங்கள் குழுவினர் பல நாட்கள் இரவு, பகலாக அயராது உழைத்தனர். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால், கழிவுநீர்த் தொட்டிகளில் இருந்து மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை முற்றிலும் ஒழித்துவிடமுடியும்'' என்றார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்