விருத்தாசலத்தில் 2 கடைகளில் பணம் கொள்ளை மேற்கூரையை பிரித்து மர்மநபர்கள் கைவரிசை

விருத்தாசலத்தில் மேற்கூரையை பிரித்து 2 கடைகளில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-20 18:45 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் ஆலடி சாலையை சேர்ந்தவர் முகமது இப்ராகிம்(வயது 50). இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், முகமது இப்ராகிம் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்க்குகளை காணவில்லை. மேலும் கல்லாப்பெட்டியும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை காணவில்லை.

கடை ஷட்டரின் பூட்டை உடைக்காமல் உள்ளே பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த முகமது இப்ராகிம், கடையின் மேல்தளத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது மேற்கூரை பிாிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கூரையை பிரித்து இறங்கிய மர்மநபர்கள் பணம் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் ஒரு கடை

மேலும் இதேபோல் அருகே மகளிர் ஆடையகம் வைத்து நடத்தி வரும் பாஸ்கர் என்பவரது கடையின் மேற்கூரையையும் பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் செயின், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு வந்து கொள்ளை நடந்த 2 கடைகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்க்குகளை சேதப்படுத்தி எடுத்து சென்றதால் கொள்ளையர்கள் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள கடைகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால், கடை உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்