என்ஜினீயர் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை

Update: 2023-02-11 19:30 GMT

சூரமங்கலம்:-

சேலத்தில் என்ஜினீயர் வீட்டில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்ததுடன், அங்கிருந்த சொகுசு காரையும் ஓட்டிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

என்ஜினீயர்

சேலம் ரெட்டிப்பட்டி இன்டேன் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 54). இவர் சவூதி அரேபியா நாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அவருடன் மனைவி செல்வி மற்றும் மகன் தினேஷ் ஆகியோரும் வசித்து வருகின்றனர். சேலத்தில் உள்ள வீட்டை ஜாகீர்காமநாயக்கன்பட்டியில் வசித்து வரும் கோவிந்தராஜின் மாமனார் பழனிசாமி பராமரித்து வருகிறார்.

இவர் தினமும் அங்கு சென்று தான் தூங்குவது வழக்கம். ஜாகீர் காமநாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. பழனிசாமி பூசாரி என்பதால் கடந்த சில நாட்களாக மருமகன் கோவிந்தராஜ் வீட்டுக்கு அவர் செல்லவில்லை. கோவிந்தராஜ் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான இணைப்பு அவரது செல்போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நகை, கார் கொள்ளை

இந்தநிலையில் நேற்று அதிகாலை சேலத்தில் உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் துணிபோட்டு மறைக்கப்பட்டிருப்பதை பார்த்து கோவிந்தராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக மாமனாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பழனிசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 கிராம் தங்கம், ½ கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதுதவிர வீட்டில் நிறுத்தி இருந்த சொகுசு காரையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்்தது.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தங்கம், வெள்ளிப்பொருட்களை திருடியதுடன், சொகுசுகாரையைும் ஓட்டிச்சென்றது தெரிய வந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்