பூந்தமல்லியில் கொள்ளை வழக்கு: போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது
போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி பகுதியில் கடந்த 2000-ம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் மாரி என்ற சின்னமாரி, டேவிட்பினு, பீட்டர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் வழக்கு விசாரணைக்கு 2001-ம் ஆண்டு சிறையிலிருந்து 3 பேரை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் செய்து விட்டு சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் போலீசாரை தாக்கி விட்டு 3 பேரும் தப்பி ஓடினர். அப்போது தப்பி ஓடிய மாரி என்ற சின்ன மாரியை போலீசார் சுட்டு கொன்றனர். தப்பி ஓடிய பீட்டரை போலீசார் பிடித்தனர். டேவிட்பினு தப்பி சென்று விட்டார்.
தப்பியோடிய டேவிட்பினுவை பல ஆண்டுகளாக பூந்தமல்லி போலீசார் தேடி வந்த நிலையில் அவர் கேரளா மாநிலம் கொல்லம் சிறையில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் டேவிட்பினுவை கைது செய்து கேரள போலீசார் உதவியுடன் பூந்தமல்லி கோர்ட்டில் நீதிபதி முன்பு நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டேவிட்பினு தனது பெயரை சசி என மாற்றி கொண்டு கேரள மாநிலத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய டேவிட்பினு 23 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.