காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி

திருச்சுழி அருகே காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.

Update: 2022-12-03 19:15 GMT

திருச்சுழி, 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசர்களாக செந்தில், மாரியப்பன் உள்பட விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். டாஸ்மாக் கடை காட்டுப்பகுதியில் உள்ளதால் முருகன், ராமர் ஆகிய இருவரும் இரவு பணி காவலாளியாக பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காவலாளிகள் இருவரையும் கட்டி போட்டனர். பின்னர் டாஸ்மாக் கடையை உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது காவலாளி ஒருவர் போலீசார் ரோந்து பணிக்கு வரும் நேரம் என கூறினார். இதையடுத்து சுதாரித்து கொண்ட மர்மநபர்கள், அவர்கள் 2 பேரிடம் இருந்த செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

இதுகுறித்து திருச்சுழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அந்த வழியாக நரிக்குடி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ரோந்து பணிக்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை காவலாளிகள் கூறினர். பின்னர் மர்மநபர்களை போலீசார் துரத்தி சென்ற போது அவர்கள் இருசக்கர வாகனத்தை மிதலைக்குளம் கண்மாய் பகுதியில் போட்டு விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. காவலாளிகள் சாமர்த்தியத்தால் மதுபாட்டில்கள், லாக்கரில் இருந்த ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் தப்பியது. இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்