திண்டிவனம் அருகே துணிகரம்:மருத்துவக்கல்லூரி முன்னாள் ஊழியர் வீட்டில் ரூ.6¾ லட்சம் நகை, பணம் கொள்ளை

திண்டிவனம் அருகே மருத்துவக்கல்லூரி முன்னாள் ஊழியர் வீட்டில் ரூ.6¾ லட்சம் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

Update: 2023-08-26 18:45 GMT


பிரம்மதேசம், 

திண்டிவனம் அடுத்த மானூர் அப்பாசாமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 71). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவகல்லூரியில் கணக்காளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி வளர்மதி.

இவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக நேற்று முன்தினம் காலை புதுச்சேரியில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அதே தெருவில் வசிக்கும் அவரது மகளான ராஜலட்சுமியிடம் தனது வீட்டு சாவியை சக்கரவர்த்தி கொடுத்து சென்றார்.

நகை, பணம் கொள்ளை

இந்நிலையில், நேற்று காலை ராஜலட்சுமியின் கணவர் அருண்குமார், சக்கரவர்த்தியின் வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. இதை பாா்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அங்கு படுக்கை அறையில் இருந்த இரும்பு பீரோ கதவை உடைத்து அதிலிருந்த 13 பவுன் நகை, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.6¾ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இரவில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்து.

வலைவீச்சு

இதுகுறித்து அவர் பிரம்மதேசம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து, அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். அதேபோன்று, விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்