அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை
சிதம்பரத்தில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் தொப்பையன் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 48). சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 7 செல்போன்களை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
நாட்டு மருந்து கடை
இதேபோல் செல்போன் கடை அருகே இருந்த நொச்சிக்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் நாட்டு மருந்து கடைக்குள் புகுந்து ரூ.12 ஆயிரமும் அதன் அருகே இருந்த தனியார் டெலிகாம் நிறுவன ஷோரூம் கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரம் ஆகியவற்றையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த கடைகளில் பதிவாகி இருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அடுத்தடுத்து 3 கடைகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.