அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை
குமாரபாளையம் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
குமாரபாளையம்
பத்ரகாளியம்மன் கோவில்
குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜன் என்பவர் காவலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் கோவில் கேட்டை பூட்டிவிட்டு கோவிலின் உள்ளே தூங்க சென்றார். இந்தநிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது ராஜனின் செல்போனை காணவில்லை. இதையடுத்து கோவில் முழுவதும் தனது செல்போனை தேடி பார்த்துள்ளார்.
அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கேட்டு திறந்து கிடந்தது. அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் உண்டியலில் இருந்து பணம், நகையை மா்மநபர்கள் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரிவந்தது. காவலாளி ராஜன் கோவில் பூசாரி வேலுமணி மற்றும் கோவில் நிர்வாகிகளுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து கோவில் நிர்வாகிகள் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பணம், நகை கொள்ளை
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாா் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. உண்டியலில் ரூ.2 லட்சம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவில் உண்டியலை உடைத்து பணம், நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.