திருவாரூர் மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளை; தந்தை-மகன் உள்பட 6 பேர் கைது

சிறையில் இருந்து திட்டம் தீட்டி திருவாரூர் மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளையடித்த தந்தை, மகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-20 19:30 GMT

சிறையில் இருந்து திட்டம் தீட்டி திருவாரூர் மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளையடித்த தந்தை, மகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டில் கொள்ளை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டியமுலை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கமருதீன். இவருடைய மனைவி ரபியா பேகம்(வயது 55). கணவர் இறந்து விட்டதால் மகன்கள் சிராஜுதீன் ஆசிப்முகமது மற்றும் பேரக்குழந்தைகளுடன் ரபியா பேகம் வசித்து வந்தார்.

இவர்கள் கடந்த மாதம்(ஏப்ரல்) 28-ந் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் ரபியா பேகம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தனிப்படையினர் தீவிர விசாரணை

இதேபோல் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருவாரூர், ஆலிவலம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கொள்ளை நடந்து வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, கார்த்தி, சிறப்பு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், காமராஜ் உள்ளிட்டோரை கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் பைபாஸ் சாலை அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தென்னம்புலம் நடுக்காட்டை சேர்ந்த மகேந்திரன்(48) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் தனது மகன் மற்றும் சிலருடன் சேர்ந்து சிறையில் இருந்து திட்டம் தீட்டி திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளில் தொடர்ந்து கொள்ளையடித்து வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

மகனுடன் சிறை வாசம்

வேதாரண்யம் அருகே உள்ள தென்னம்புலம் நடுக்காட்டை சேர்ந்த மகேந்திரன், ஒரு வழக்கில் கைதாகி தனது மகன் மகேஷ்(19) என்பவருடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவர்களுடன் வடபாதிமங்கலத்தை சேர்ந்த குமார் மகன் பிரதாப்(21), பன்னீர்செல்வம் மகன் விஜய்(22), முத்துப்பேட்டை கொய்யா தோப்பை சேர்ந்த வினோத்(26), திட்டச்சேரி நத்தம் காலனி தெருவை சேர்ந்த ராஜி மகன் எபினேசர்(19) ஆகிய 4 பேரும் சிறையில் இருந்தனர்.

கொள்ளையடிக்க ஆலோசனை

சிறையில் இருந்தபோது இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, சிறையில் இருந்து வெளியே சென்ற பிறகு எங்கு கொள்ளையடிக்கலாம்? எந்தெந்த பகுதியில் வசதியானவர்களின் வீடுகள் உள்ளன? என ஆலோசனை நடத்தி திட்டம் தீட்டி உள்ளனர்.

அதன்படி சிறையில் இருந்து வெளியே வந்ததும் திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே செட்டியமுலையில் உள்ள ரபியாபேகம் வீட்டிலும் இவர்கள், நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அதேபோல வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர், ஆலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தொடர்ந்து கொள்ளையடித்து வந்த நிலையில் தற்போது சிக்கி கொண்டதாக போலீசார் கூறினர்.

6 பேர் கைது

இவர்கள் பல வீடுகளில் சேர்த்து மொத்தம் 55 பவுன் நகைகள், ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடித்துள்ளனர். தொடர் கொள்ளை தொடர்பாக மகேந்திரன், அவருடைய மகன் மகேஷ் உள்பட 6 பேரையும் கைது செய்த போலீசார், கைதானவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.3 லட்சம், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பல வீடுகளில் கொள்ளையடித்தவர்களை விரைவாக கைது செய்த போலீசாரை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்