டிரைவர், எலக்ட்ரீசியனை கொன்ற வழக்கில் கொள்ளையனுக்கு வாழ்நாள் சிறை
தந்தை உள்பட 8 பேரை கொலை செய்த வழக்கில் கைதான கொள்ளையனுக்கு டிரைவர், எலக்ட்ரீசியனை கொன்றதற்காக ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு நேற்று தீர்ப்பு கூறினார்.
தந்தை உள்பட 8 பேரை கொலை செய்த வழக்கில் கைதான கொள்ளையனுக்கு டிரைவர், எலக்ட்ரீசியனை கொன்றதற்காக ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு நேற்று தீர்ப்பு கூறினார்.
டிரைவர் மாயம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை (வயது 36). ரெயில்வேயில் ஒப்பந்த முறையில் டிரைவராக பணியாற்றி வந்த இவர், சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாய வேலையும் செய்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி இரவு இவருடைய டிராக்டர் பழுதாகியுள்ளது.
அதை சரி செய்து வருவதாக தனது மனைவி வினோதினியிடம் கூறிச்சென்ற தங்கதுரை பின்னர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் 10-9-2016 அன்று திருவெறும்பூர் போலீசில் வினோதினி தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கதுரையை தேடி வந்தனர்.
கொலை செய்து புதைப்பு
கடந்த 13-9-2016 அன்று கிருஷ்ணசமுத்திரம் பந்தாளபேட்டை மெயின்ரோட்டில் மெக்கனாச்சியம்மன் கோவில் அருகில் உள்ள வாய்க்காலில் கடும் துர்நாற்றம் வீசுவதாக கிராம நிர்வாக அதிகாரி செல்வகணேஷ் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, வாய்க்காலில் ஆண் பிணம் புதைக்கப்பட்டு இருந்தது. அதை தோண்டி எடுத்து பார்த்த போது, அது மாயமான தங்கதுரையின் உடல் என்பதும், அவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்து புதைத்து இருப்பதும் தெரியவந்தது.
போலீசாரின் தொடர் விசாரணையில், தங்கதுரையின் செல்போனை கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த அவருடன் பள்ளியில் படித்த நண்பரான சப்பாணி (43) பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. சப்பாணியை பிடித்து விசாரித்தபோது, நகைக்கு ஆசைப்பட்டு தங்கதுரையை தலையில் கல்லை போட்டு கொலை செய்து, 3 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
7 பேரை கொன்றது அம்பலம்
அத்துடன் இதுபோல், தன் தந்தை தேக்கன் (75), திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சியை சேர்ந்த அற்புதசாமி (70), கீழ குமரேசபுரத்தை சேர்ந்த விஜய்விக்டர் (27), கூத்தைப்பாரை சேர்ந்த எலக்ட்ரீசியன் சத்தியநாதன் (45), பெரியசாமி (75), வடகாடு விஸ்வம்பாள் சமுத்திரத்தை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் குமரேசன் (50) ஆகிய 7 பேரையும் கொலை செய்ததாக சப்பாணி வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, தங்கதுரை கொலை வழக்கில் சப்பாணியை கைது செய்த போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர், சப்பாணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில், ஏற்கனவே தங்கதுரை உடல் மீட்கப்பட்ட வாய்க்காலுக்கு அருகில், புதைக்கப்பட்டு இருந்த சத்தியநாதனின் உடல் எலும்புகளும், ஆடைகளும் கிடைத்தன.
உடல்கள் தோண்டி எடுப்பு
பின்னர், சப்பாணி கூறிய தகவலின்பேரில், அதே ஊரில் உள்ள செக்குப்பாறை குளக்கரையில் குமரேசனின் உடல் பாகங்களின் எலும்புகள் கிடைத்தன. குளத்தின் மற்றொரு பகுதியில், மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. கிருஷ்ணசமுத்திரத்தில் உள்ள சந்தனக்கருப்பு கோவில் அருகில் புதைக்கப்பட்டிருந்த விஜய் விக்டரின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால், அவரது 2 கால்களையும் காணவில்லை. அவற்றை கல்லணை பகுதியில் வீசிவிட்டதாக சப்பாணி கூறியுள்ளார்.
அதன்பின் அதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் இருந்து சப்பாணியின் தந்தை தேக்கனின் உடலைத்தோண்டி எடுத்தனர். பின்னர் கூத்தைப்பார் செவந்தான்குளம் பகுதியில் கோகிலாவின் உடல் பாகங்களை தோண்டி எடுத்தனர். அவரது தலை மற்றும் 2 கால்களின் எலும்புகள் கிடைக்கவில்லை. 5 இடங்களில் தோண்டி கைப்பற்றப்பட்ட எலும்பு துண்டுகளை திருச்சி அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வியல் துறை மருத்துவர் சரவணன் தலைமையிலான குழுவினர், அந்தந்த இடத்திலேயே பரிசோதனை செய்தனர்.
4 வழக்கில் விசாரணை நிறைவு
இதில் தங்கதுரை, சத்தியநாதன், தேக்கன், குமரேசன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பாபு முன்னிலையில் தனித்தனியாக நடந்து வருகிறது. அரசு தரப்பில் வக்கீல் சவரிமுத்து ஆஜரானார். இதில் 4 வழக்குகளிலும் சாட்சி விசாரணைகள் நிறைவு அடைந்து விட்டது.
முதற்கட்டமாக தங்கதுரை, சத்தியநாதன் ஆகியோரை கொலை செய்த 2 வழக்குகளில் நேற்று காலை தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக நேற்று காலை சப்பாணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆயுள் முழுவதும் சிறை
அப்போது, அவர் நீதிபதி முன் தான் குற்றவாளி இல்லை என்றும், தன்மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து சப்பாணியை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 364 (ஆள்கடத்தல்), 394 (கொள்ளையடித்தல்), 302 (கொலை செய்தல்) மற்றும் 201 (சாட்சியத்தைமறைத்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு கூறிவிட்டு தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர், சப்பாணிக்கு 2 வழக்குகளிலும் இந்திய தண்டனை சட்டம் 364, 394 பிரிவின் கீழ் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை, 201 பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை, 302 பிரிவின் கீழ் சப்பாணி தனது ஆயுள் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து ஆயுள் சிறை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
நாளை 2 வழக்கில் தீர்ப்பு
மேலும் மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் அதை கட்டத்தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். அத்துடன் இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து சப்பாணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
தேக்கன், குமரேசன் ஆகியோரை கொலை செய்த இரு வழக்கிலும் நாளை (புதன்கிழமை) திருச்சி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட உள்ளது. அதே நேரம் கோகிலா, விஜய்விக்டர் கொலை வழக்கு விசாரணை அளவிலேயே உள்ளது. அற்புதசாமி, பெரியசாமி ஆகியோரின் உடல் இன்று வரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
25 பவுன் நகைகள் கொள்ளை
வாழ்நாள் சிறைதண்டனை பெற்ற சப்பாணி தான் கொலை செய்த ஒவ்வொருவரிடமும் இருந்து தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளான். கொலையான 8 பேரிடம் இருந்து சுமார் 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.