கும்மிடிப்பூண்டியில் ஓட்டலில் புகுந்து ரூ.2½ லட்சம் திருட்டு - மர்ம நபருக்கு வலைவீச்சு

கும்மிடிப்பூண்டியில் ஓட்டலில் புகுந்து ரூ.2½ லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி அடிப்படையில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-03 12:12 GMT

விருதுநகர் மாவட்டம் மண்டப சாலை கிராமத்தை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 23). கும்மிடிப்பூண்டி குளக்கரை அருகே வசித்து வரும் இவர், கும்மிடிப்பூண்டி பஜாரில் சொந்தமாக கடந்த 5 ஆண்டுகளாக ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல ஓட்டலை மூடிவிட்டு அருண் குமார் தனது வீட்டிற்கு சென்று விட்டார். ஊழியர்கள் கடையின் மேல் மாடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் கடையின் முன்பக்க இரும்பு கதவு வழியாக ஏறி உள்ளே குதித்த மர்ம ஆசாமி ஒருவன், அங்கிருந்த கல்லா பெட்டியை கள்ள சாவி போட்டு திறந்து அதிலிருந்த ரொக்கப்பணம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை எண்ணி பார்த்து பிறகு அதனை அள்ளிச் சென்றான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரூ.10 நோட்டு கட்டை அங்கேயே விட்டு விட்டு சென்றான்.

அதேபோல அருகே மஸ்தான் பாபு (38) என்பவருக்கு சொந்தமான காய்கறி கடைக்கு ஏறி குதித்த அதே மர்ம ஆசாமி அங்கிருந்த கல்லாபெட்டியை உடைத்து அதிலிருந்த ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரத்தையும் அள்ளிச் சென்றான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி ஆய்வு நடத்தினார். இந்த திருட்டு தொடர்பாக அங்கிருந்த கண்காணிப்பு கேமரா கட்சியில் மர்ம நபரின் உருவம் தெளிவாக கண்டறியப்பட்டு உள்ளது.

மேற்கண்ட கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர திருட்டு சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்