கொடைக்கானலில் பொதுமக்களை அச்சுறுத்தும் சாலையோர மரங்களை அகற்ற வேண்டும்; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

கொடைக்கானலில் பொதுமக்களை அச்சுறுத்தும் சாலையோர மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-07-29 16:01 GMT

கொடைக்கானல் தாலுகா பகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமை தாங்கினார். இதில், உதவி வனபாதுகாவலர் சக்திவேல், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பரதன், வனச்சரகர் சிவக்குமார் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அப்போது, கொடைக்கானல் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மரங்கள் ஏராளம் உள்ளன. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நிலையில் உள்ள சாலையோர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்பகுதியில் வெள்ளைப்பூண்டு கொள்முதல் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகவுஞ்சி பகுதியில் 1978-ம் ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகள் அப்பகுதியில் விவசாயம் செய்ய அனுமதிப்பதுடன் அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

பின்னர் ஆர்.டி.ஓ. பேசுகையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள சாலையோர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகவுஞ்சி பகுதியில் விவசாயிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்