திருச்சி மாநகரில் தொடர் மழையால் உருக்குலைந்த சாலைகள்
தொடர் மழையால் உருக்குலைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழையால் உருக்குலைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் பள்ளம்
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையால் திருச்சி மாநகரில் பல சாலைகள் சேதம் அடைந்துள்ளன. பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டு பின்பு மூடப்பட்ட இடங்களில் தற்போது பெய்த மழையால் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் தற்காலிகமாக போடப்பட்ட தார் சாலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர்.
தடுமாற்றம்
இதேபோல் திருச்சி புத்தூர் ஈ.வி.ஆர். ரோடு, அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வெளியூரை சேர்ந்த வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து தடுமாறி செல்கின்றனர். இதே நிலை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
இதேபோல, கண்டோன்மெண்ட் சாலை மற்றும் திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் இருந்து மத்திய பஸ்நிலையம் செல்லும் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இந்த சாலையை கடப்பவர்கள் தினமும் புலம்பியபடியே செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலையோரம் நடந்து செல்பவர்கள் மீது அந்த தண்ணீரை வாகனங்கள் வாரிஇறைத்து செல்கிறது. இதனால் பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
கோரிக்கை
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளம் ஏற்பட்டு உருக்குலைந்த சாலைகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.