திருச்செங்கோடு சூரியம்பாளையத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Update: 2022-12-17 18:45 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு சூரியம்பாளையத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாக்கடை கால்வாய்

திருச்செங்கோடு நகராட்சி தொண்டிக்கரடு முனியப்பன் கோவில் குப்பண்ணன் காடு பகுதியில் பல ஆண்டுகளாக மழைநீர் சாலையில் தேங்கும் பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சீத்தாராம் பாளையத்தில் இருந்து சுமார் 1½ கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.1 கோடியில் சாக்கடை கால்வாய் அமைக்க திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு சூரியம்பாளையம் பகுதி வழியாக அதனை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இதனை அறிந்த சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் சாக்கடை கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்செங்கோடு ஆனங்கூர் சாலையில் திரண்டனர். பின்னர் சூரியம்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பழனிசாமி, நகர இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், மேலாளர் குமரேசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் சூரியம்பாளையத்தில் சாக்கடை கால்வாய் அமைந்தால் 4 வார்டுகளில் இருந்து வரும் மழைநீர் மற்றும் கழிவுநீர் தங்களது பகுதி வழியாக செல்லும் எனவும், அவ்வாறு செல்வதால் தங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்