கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறக்கக்கோரி சாலைமறியல்

ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறக்கக்கோரி சாலைமறியல் போராட்டம் நடந்தது.

Update: 2023-07-20 19:49 GMT

தாரமங்கலம்:-

ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறக்கக்கோரி சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ராமிரெட்டிப்பட்டி ஊராட்சி 8-வது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 7 மாதங்கள் ஆகிறது. இதற்கிடையே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்ட இடம் தங்களுக்கு சொந்தம் என 2 பேர் தங்களுக்கு பாத்தியப்பட்டது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் அந்த குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்கவும், தண்ணீர் வினியோகம் செய்யவும் முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

சாலைமறியல்

இந்த குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தாரமங்கலம்- ஜலகண்டாபுரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து ஓமலூர் தாசில்தார் புருஷோத்தமன், தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் சுமதிபாபு, துணைத்தலைவர் சீனிவாசன், பொறியாளர்கள் கண்ணன், சீனிவாசன் உள்பட பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கலைந்து சென்றனர்

பின்னர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ள இடத்துக்கு உரிமை கொண்டாடும் 2 பேரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்பிறகு அந்த பகுதி மக்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்