சாலை மறியல் போராட்டம்

ஜோலார்பேட்டையில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-24 18:31 GMT

குண்டும் குழியுமான சாலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ரோடு குண்டும் குழியுமாக மாறி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இந்த சாலை போலீஸ் நிலையம், ரெயில் நிலையம், மின்வாரிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிய சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மறியல் போராட்டம்

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கால்வாய் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புக்கான பணி நடைபெற்றது. பின்னர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு சாலை முழுவதும் பொக்லைன் எந்திரம் மூலம் கொத்தி எடுக்கப்பட்டு பின்னர் ஜல்லி கற்கள் நிரப்பப்பட்டது. ஆனால் தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட வில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் இணைந்து, சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன், நகராட்சி ஆணையர் பழனி, நகர செயலாளர் ம.அன்பழகன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில நாட்களில் தார் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்