தார் சாலை அமைக்கக்கோரி சாலைமறியல்
புதூர்நாடு-விளாங்குப்பம் இடையே தார் சாலை அமைக்கக்கோரி சாலைமறியல் நடந்தது.
திருப்பத்தூர் தாலுகா ஜவ்வாது மலை புதூர்நாடு பகுதியில் இருந்து விளாங்குப்பம் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக மண் சாலையாக உள்ளது உடனடியாக இதனை தார் சாலையாக மாற்ற வேண்டும் என மலை கிராம மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. டெல்லி பாபு தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு, கூட்ரோடு விளாங்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.சங்கர், ஜெ.மணவாளன், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ''புதூர் நாடு சாலையில் இருந்து விளாங்குப்பம் வரை உள்ள சாலை வனத்துறைக்கு சொந்தமானது, சாலை போட வனத்துறை அனுமதி வேண்டும், தார் சாலை போட அனுமதி கேட்டு வனத்துறையினருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது, மேலும் வனத்துறையினர் கொடுக்கும் நிலத்திற்கு இரண்டு மடங்கு நிலத்தை வருவாய் துறையினர் தரவேண்டும் என்ற அரசாணை உள்ளது'' என்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ''தார்சாலை அமைக்கததால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே உடனடியாக தார்சாலை அமைக்கவேண்டும்'' எனக்கூறி தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் சமரசத்தை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.