இந்திய தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்

இந்திய தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்

Update: 2023-04-20 18:45 GMT

திருவாரூர் புதிய பஸ்நிலைய சாலையை சீரமைக்கக்கோரி இந்திய தொழிற்சங்கத்தினர் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர் புதிய பஸ் நிலையம்

திருவாரூர் புதிய பஸ் நிலையம் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையமானது நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்குள் செல்வதற்கும், வெளியில் வருவதற்கும் இருவழி இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது.

இந்த இருவழி இணைப்பு சாலைகள் கடந்த 3 ஆண்டுகளாக மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சேதமடைந்து வருகிறது. இவ்வாறு சேதம் அடையும் சாலை தற்காலிகமாக சீரமைப்படுவது தொடர்ந்து நடக்கிறது. குறிப்பாக பஸ் நிலையத்துக்குள் எந்த வாகனமும் சென்று வர முடியாத நிலை உள்ளது. இதனால் சாலை பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த பள்ளங்களால் அரசு பஸ்கள் பழுது ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து, மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல முறை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சாலைமறியல்

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய தொழிற்சங்கத்தினர் நேற்று தஞ்சை-நாகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் அனிபா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகையன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் மாலதி, மாவட்ட துணை செயலாளர்கள் வைத்தியநாதன், லெனின், துணை செயலாளர் கஜேந்திரன், துணை தலைவர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 10 நாட்களில் சாலை சீரமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தால் திருவாரூரில் முக்கிய சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்