ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைமறியல்
வலங்கைமானில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாக்குதல்
கஞ்சா, குட்கா, லாட்டரி உள்ளிட்ட பொருட்களை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்திய சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது ஒரு மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி கடைத்தெருவில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. வேலவன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் விஜய், தலைவர் சந்திரசேகர், பொருளாளர் அருண் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்். அதில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.