குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடவன்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக குறைந்த மின்அழுத்த மின்வினியோகத்தால் அவதிப்பட்டனர். கடந்த 10 நாட்களாக ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் அருகில் உள்ள ஊருணிக்கு சென்று குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆத்திரமடைந்த இந்த பகுதி மக்கள் அரளிக்கோட்டை கீழவளவு நெடுஞ்சாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சாந்தி மற்றும் எஸ்.எஸ்.கோட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குறைந்த மின்அழுத்தத்தை சரி செய்யவும், அப்பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.