உறவினர்கள் சாலை மறியல்; போலீஸ் குவிப்பு
அயோத்தியாப்பட்டணம் அருகே வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதுடன், 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அயோத்தியாப்பட்டணம்,
அயோத்தியாப்பட்டணம் அருகே வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அவருடைய உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதுடன், 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் மீது தாக்குதல்
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள அக்ரகார நாட்டாமங்கலம் ஏரி புதூர் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
அதன்பிறகு வாலிபர்கள் சிலர் மது போதையில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் வாலிபர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்தார். அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சாலைமறியல்
இந்நிலையில் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி காயமடைந்த வாலிபரின் உறவினர்கள் நேற்று காலை 11 மணியளவில், அயோத்தியாப்பட்டணம்-கருமந்துறை நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கரி தலைமையிலான போலீசார், சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த தகராறு இருதரப்பு பிரச்சினையாக மாறி உள்ளதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தகராறில் ஈடுபட்ட 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.