காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

ராசிபுரம் நகரில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-27 19:00 GMT

ராசிபுரம்

குடிநீர் வசதி

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரசேகரபுரம், தெற்குப்பட்டி, அக்ரஹாரம், முருங்கப்பட்டி, களரம்பட்டி, அணைப்பாளையம் தேவேந்திர் தெரு போன்ற பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அணைப்பாளையம் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்களிலும் புகுந்தது. இதனால் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 3 ஆழ்துளை கிணறுகள் ஏரி தண்ணீரால் மூழ்கின.

இதன் காரணமாக தெற்குப்பட்டி, சந்திரசேகரபுரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கவில்லை என்றும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின் மோட்டார்களை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் தெற்குப்பட்டியில் உள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் குழாய் பதிக்க வேண்டும், அணைப்பாளையம் ஏரி தண்ணீரை திறந்து விட வேண்டும், ஏரி மதகை திறந்து விட காலதாமதம் செய்யும் அதிகாரிகளை கண்டித்தும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி சந்திரசேகரபுரம், அக்ரகாரம், தெற்குபட்டி, முருங்கப்பட்டி பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வனிதா விரைந்து வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தெற்குப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு புதிய குடிநீர் குழாய் உடனடியாக போட்டு தரப்படும் என்று கூறினார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Tags:    

மேலும் செய்திகள்