ஊத்தங்கரை பகுதியில் கனமழை:வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

ஊத்தங்கரை பகுதியில் கனமழை பெய்ததால் கொல்லப்பட்டி கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வடிகால் வசதி செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-18 19:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை பகுதியில் கனமழை பெய்ததால் கொல்லப்பட்டி கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வடிகால் வசதி செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

ஊத்தங்கரை பகுதியில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது. கனமழை காரணமாக வெங்கடதாம்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டி கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் குழந்தைகளுடன் அவதிக்குள்ளாகினர். நேற்று காலை 8 மணி வரை தண்ணீர் வடியாமல் வீடுகளை சூழ்ந்து இருந்தது. இதன் காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

சாலை மறியல்

இதனால் மழைநீரை அப்புறப்படுத்தவும், வடிகால் வசதி ஏற்படுத்த கோரியும் பொதுமக்கள் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்