சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
வேதாரண்யம் பகுதியில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;
வேதாரண்யம் பகுதியில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அறிவழகன், ஒன்றிய ஆணையர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலர் ரமேஷ் ஒன்றிய செலவினங்கள் குறித்த விவரங்களையும், பணிகள் குறித்த தீர்மானங்களையும் படித்தார். பின்னர் தீர்மாணங்கள் குறித்து உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
நடராஜன்:
கரியாப்பட்டினம் ஊராட்சியில் சாலை பணிகளை முடிக்க வேண்டும்.
அமுதா:- புதிய வகுப்பறை, அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெகநாதன்:- செம்போடை ஊராட்சியில் மயான கூரைகள் அமைக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும்.
ராஜா:- புஷ்பவனம் ஊராட்சியில் உடைந்த நிலையில் காணப்படும் கள்ளிமேடு செல்வதற்கான மரப்பாலத்தை அகற்றி விட்டு சிமெண்டு பாலம் கட்ட வேண்டும்.
பாலங்களை சீரமைக்க வேண்டும்
வைத்தியநாதன்:- தாணிக்கோட்டகம் ஊராட்சி பகுதியில் உள்ள வடிகால் பாலங்களை சீரமைக்க வேண்டும்.
கோமதி:- வண்டுவாஞ்சேரியில் உள்ள பள்ளியில் தற்காலிக வகுப்பறைக்கு பதிலாக புதிய கட்டிடம் வேண்டும்.
வேதரெத்தினம்:- மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க புயல் பாதுகாப்பு நிலையம் கட்ட வேண்டும்.
கண்ணகி:- ஆயக்காரன்புலம் ஊராட்சி பகுதியில் மின் மயானம் அமைக்கவும், பிரதான கடைத்தெரு பகுதியில் வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜசேகரன்:-
கடந்த ஆட்சியில் இருந்த திருமண உதவி திட்டம் நடைமுறையில் உள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும். பள்ளிக்கு சமையல் கூடம் வேண்டும்.
துணைத்தலைவர்:- கோடியக்காடு, கோடியக்கரை ஆகிய ஊராட்சிகளில் பழுதாக உள்ள காலனி வீடுகளை புனரமைக்க வேண்டும்.
சமையல் கூடங்கள்
தலைவர்:-
ஒன்றிய பகுதிகளில் சாலைப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நிதி ஆதாரங்களுக்கு தகுந்தபடி செயல்படுத்தப்படும்.
ஆணையர்:-
பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி, சமையல் கூடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிதிக்கு ஏற்ப புதிய கட்டிடங்கள் கட்டப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. இதேபோல உறுப்பினர்கள் ருக்மணி, அருள்மேரி, சாந்தி, நளினி, பரிமளா, தனபால் உள்ளிட்டோர் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை நன்றி கூறினார்.