பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க சாலை பணியாளர்கள் கோரிக்கை

பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க சாலை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-25 19:07 GMT

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 7-வது மாநில மாநாடு பெரம்பலூரில் நேற்று தொடங்கியது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர்கள் ராஜா சிதம்பரம், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்பு குழு தலைவர் செல்லச்சாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். பொருளாளர் குருசாமி சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். சங்கத்தின் தீர்மானங்களை முன்மொழிந்து துணைத் தலைவர்கள் பேசினர்.

மாநாட்டில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் தன்னிச்சையான நடவடிக்கையை மத்திய அரசு தடுக்க வேண்டும். பெருகிவரும் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி, விவசாய தொழில் முன்னேற்றங்களிலும், கல்வி மேம்பாட்டிலும் தன்னிறைவை எட்டி வரும் பெரம்பலூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் தர ஊதியத்தை ரூ.1,900 ஆக உயர்த்தி அன்ஸ்கில்டு பணியாளர்களாக அறிவித்திட வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் உள்ள சாலை பணியாளர்கள் காலி பணியிடங்களை வேலை இல்லாத இளைஞர்களுக்கு வழங்கிட வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாநில மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மாலையில் சாலை பணியாளர்கள் குடும்பத்தினருடன் ஊர்வலம் செல்கின்றனர். இதைத்தொடர்ந்து நடைபெறும் மாநாட்டில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சிவசங்கர், முன்னாள் மத்திய மந்திரி ராசா எம்.பி. மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்