பழனி-ஒட்டன்சத்திரம் இடையே சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்
பழனி-ஒட்டன்சத்திரம் இடையே சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை பழனி வழியாக செல்கிறது. மதுரை, திண்டுக்கல் உள்பட தென்மாவட்ட பகுதிகளில் இருந்து லாரி, பஸ், கார்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த சாலை வழியாக செல்கின்றன. மேலும் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.
இந்தநிலையில் பழனி-திண்டுக்கல் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பழனி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பழனி-ஒட்டன்சத்திரம் சாலையில் விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில், சாலை விபத்து தடுப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சிந்தலவாடம்பட்டி, ஆயக்குடி, கணக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. பின்னர் அங்கு பள்ளம் தோண்டி கற்கள் நிரப்பப்பட்டு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்துகளை குறைக்கவும், பாதயாத்திரை பக்தர்களின் நலனுக்காகவும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒட்டன்சத்திரம்-பழனி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசுக்கு ஒப்புதல் அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கப்படும் என்றார்.