வனப்பகுதியில் அனுமதியின்றி எந்திரங்கள் மூலம் பாதை விரிவாக்கம்:வெளிமாநில தொழிலாளர்கள் உள்பட 3 பேர் கைது-2 எந்திரங்கள் பறிமுதல்

கோத்தகிரி அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வனதுறையினரின் அனுமதி பெறாமல் பொக்லைன் எந்திரத்தைப் பயன்படுத்தி, காட்டு மரங்களை வேருடன் சாய்த்து பாதை விரிவாக்க பணிகள் செய்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2023-04-14 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வனதுறையினரின் அனுமதி பெறாமல் பொக்லைன் எந்திரத்தைப் பயன்படுத்தி, காட்டு மரங்களை வேருடன் சாய்த்து பாதை விரிவாக்க பணிகள் செய்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் உள்ள மேடநாடு எஸ்டேட் காப்பு காட்டின் வழியே செல்லும் அனுமதிக்கப்பட்ட மண் சாலை வழித்தடத்தில் அனுமதி பெறாமல் மேம்பாட்டு பணிகள் செய்து வருவதாகவும், சாலை ஓரத்தில் உள்ள மரங்களை வேருடன் சரித்து வருவதாகவும் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் உத்தரவின்படி மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன அலுவலர் சரவணகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோத்தகிரி வன சரகத்திற்கு உட்பட்ட கர்சன் எஸ்டேட் முதல் மேடநாடு எஸ்டேட் வரை உள்ள சுமார் 4 கிலோமீட்டர் நீளம் 2..1 மீட்டர் அகலமும் கொண்ட காப்பு காட்டின் வழியே செல்லும் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் முன் அனுமதி பெறாமல் பொக்லைன் எந்திரம் மற்றும் ரோலர் எந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும், அதற்காக சாலையோரத்தில் இருந்த 6 காட்டு மரங்கள் வேருடன் சரித்து விழ வைத்துள்ளதும் தெரிய வந்தது.

3 போ் கைது

இதையடுத்து உடனடியாக பணிகளை நிறுத்திய அதிகாரிகள் 2 எந்திரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனியார் எஸ்டேட்டுக்கு செல்லும் பாதையை விரிவாக்கம் செய்தவர்கள் கோத்தகிரி கேர்பெட்டாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (35), பொக்லைன் ஆபரேட்டர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த உமர் பரூக் (26) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரோலர் ஆபரேட்டர் பங்கஜ் குமார் சிங் (38) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களை கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்