உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலாத்தலமான திருமூர்த்திமலைக்கு செல்வதற்கு தளி பேரூராட்சி வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் சென்று வருகின்றது. எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும் உடுமலை- திருமூர்த்தி மலை பிரதான சாலையின் ஓரத்தில் திருமூர்த்தி நகர் அருகே அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைந்து விட்டதாக தெரிகிறது. இதனால் அதில் இருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி சாலை முழுவதையும்ஆக்கிரமித்து வருகிறது.
இதன் காரணமாக அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருவதுடன் நிலை தடுமாறும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு அபாயகரமான இந்த வளைவு பகுதியில் ஏற்பட்ட குழாய் உடைப்பை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. திருமூர்த்தி அணையிலும் குறைவான நீர் உள்ளதால் தற்போதைய சூழலில் குடிநீர் வீணாவது என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேஉடுமலை-திருமூர்த்திமலை பிரதான சாலையில் திருமூர்த்தி நகர் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.