சாக்கடை வசதி கேட்டு சூளை பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் சாலைமறியலில்

அவினாசி குடியிருப்பு பகுதியில் சாக்கடை வசதி கேட்டு சூளை பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-20 11:40 GMT

அவினாசி குடியிருப்பு பகுதியில் சாக்கடை வசதி கேட்டு சூளை பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் அவினாசி சூளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 448 வீடுகள் உள்ளன. இங்கு சாக்கடை வசதியில்லாததை கண்டித்து நேற்று திரளான பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை 9.30 மணியளவில் சூளை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டில் குவிந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்தும், சில பெண்கள் ரோட்டில் படுத்தபடியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

சாக்கடை கால்வாய்

இங்குள்ள 448 வீடுகளிலிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்கு மத்தியில் பல மாதங்களாக குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் கொசு, புழுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் உள்ளிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு சாக்கடை கால்வாய் வசதி அமைத்து சாக்கடைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகியவைகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. எனவே இதற்கு தீர்வுகாண வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேச்சு வார்த்தை

சாலைமறியல் குறித்த தகவல் அறிந்த தாசில்தார் சுந்தரம், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, செயல் அலுவலர் செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் சுகாதார அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பலமுறை இதற்கு தீர்வு காண்பதாக கூறுவதுடன் சரி பிறகு அதை கிடப்பில் போட்டு விடுகிறீர்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கலெக்டர் இங்கு நேரில் வந்து ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நாங்கள் இடத்தை விட்டு நகரமாட்டோம் என்றனர்.

நிரந்தர தீர்வு

மீண்டும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து தற்காலிகமாக குழாய் பதித்து சாக்கடை நீரை வெளியேற்றுவதாகவும், தொடர்ந்து கழிவுநீர் தொட்டி அமைத்து மறுசுழற்சி மூலம் சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நேற்று காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை இந்த சாலை மறியல் போராட்டம் நடந்ததால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து சேவூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், நம்பியூர் கோபி செட்டிபாளையம், மைசூரூ, உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்ட நேரம் சாலையில் நின்றது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்