காட்டுக்கொல்லை கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்
மலைக்கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மலைவாழ் மக்கள் மனு அளித்துள்ளனர்.
மலைக்கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மலைவாழ் மக்கள் மனு அளித்துள்ளனர்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுவாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சி குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
குடியாத்தம் பகுதியில் 35 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு கூட்டுறவு ஆலைகள் மூலம் நூல் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் ஆலைகளில் இருந்து குடியாத்தம் கைத்தறி சங்கங்களுக்கு நூல் கொள்முதல் செய்தால் லுங்கியின் தரம் உயரும். இதனால் கைத்தறி நெசவாளர்களின் உற்பத்தி அதிகரிக்கும். எனவே தனியார் துறை மூலம் நூல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இழப்பீடு வேண்டும்
குடியாத்தம் மற்றும் கீழ்ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் குடியாத்தம் அருகே கீழ்ஆலத்தூர் பகுதியில் இயங்கி வந்த ஒரு லுங்கி கம்பெனியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தோம்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு 32 பேரையும் வேலையில் இருந்து நீக்கி விட்டனர். இதனால் எங்களது குடும்ப வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை கேள்விக்குறியாக உள்ளது. கஎனவே எங்களது நிலை கருதி இழப்பீடு தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
சாலை வசதி
தமிழ்நாடு பழங்குடியினர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ''அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை ஊராட்சி தொங்குமலை கிராமத்தின் அருகே காட்டுக்கொல்லை பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் மலைவாழ் மக்கள். எங்கள் பகுதிக்கு செல்ல மண்சாலை இல்லாமல் உள்ளது. இதனால் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தவித்து வருகிறோம். மண்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சில அதற்கு தடையாக உள்ளனர்
எனவே அதிகாரிகள் தலையிட்டு மண்சாலை அமைத்து கொடுக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.
குழந்தையை மீட்டுத் தர வேண்டும்
கே.வி.குப்பம் அருகே உள்ள துத்திதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தி என்ற பெண் அளித்துள்ள மனுவில் நான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். எனது மகன் ஹேம்நாத்துடன் (வயது 5) கடந்த மாதம் ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றோம். அப்போது அங்கிருந்த ஒருவர் நாங்கள் ஆதரவற்றோர் என்று நினைத்து எங்களை வள்ளலாரில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்தார். அங்கு எனக்கு தங்க விருப்பம் இல்லாததால் அங்கிருந்து செல்வதாக நான் கூறியபோது என்னை அனுப்பி வைத்தனர். ஆனால் எனது குழந்தையை என்னுடன் அனுப்பி வைக்கவில்லை.
15 நாட்கள் கழித்து உனது மகனை அழைத்து செல் என்றார்கள். இப்போது எனது மகனை தர மறுக்கின்றனர். என் மகனை பிரிந்து என்னால் வாழ முடியாது. எனது மகனை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
கூட்டம் முடிந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியே வரும்போது, பெண் ஒருவர் பணப்பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவரது காலில் விழுந்தார். அந்த பெண்ணின் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.