திண்டுக்கல்-பழனி இடையே புதர்மண்டி கிடக்கும் பாதயாத்திரை பாதை

திண்டுக்கல்-பழனி இடையிலான பாத யாத்திரை பாதை புதர்மண்டியும், சேதமடைந்தும் உள்ளது. தைப்பூச சீசன் தொடங்குவதற்கு முன்பு அதை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-12-02 17:26 GMT

திண்டுக்கல்-பழனி இடையிலான பாத யாத்திரை பாதை புதர்மண்டியும், சேதமடைந்தும் உள்ளது. தைப்பூச சீசன் தொடங்குவதற்கு முன்பு அதை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாதயாத்திரை பாதை

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதிலும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வர். இதில் திண்டுக்கல் வழியே பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல்-பழனி இடையே பேவர் பிளாக் கற்களால் சாலையாரம் தனிப்பாதை அமைக்கப்பட்டது. இதன் வழியே காரைக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல் பகுதி பக்தர்கள் பழனிக்கு வருகின்றனர்.

இந்தநிலையில் திண்டுக்கல்-பழனி இடையிலான பாதயாத்திரை பாதை தற்போது பல இடங்களில் சேதமடைந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது. குறிப்பாக பழனி-ஒட்டன்சத்திரம் இடையே பாதையின் இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. அதே நேரத்தில் திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் இடையே சாலை அகலப்படுத்தும் பணி நடப்பதால் பாதயாத்திரை பாதை பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது.

சீரமைக்க வலியுறுத்தல்

மார்கழி மாதம் தொடங்கினால் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக வர தொடங்குவர். எனவே தைப்பூச சீசன் தொடங்குவதற்கு முன்பு பக்தர்களுக்கான பாதயாத்திரை பாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, முருகப்பெருமானை வேண்டி பாதயாத்திரை வரும்போது பக்தர்கள் செருப்பு அணிவது கிடையாது. பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதையில் பக்தர்கள் நடந்து வந்தனர். இந்தநிலையில் திண்டுக்கல்-பழனி இடையிலான பாதை பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் கற்கள் பெயர்ந்து உள்ளன. எனவே இந்த நிலை நீடித்தால் பாதயாத்திரை வரும் பக்தர்களின் காலை அது பதம் பார்க்கும். எனவே தைப்பூச சீசனுக்கு முன்னதாக பாத யாத்திரை பாதையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்