படப்பை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
படப்பை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.;
காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக அரசு பஸ்களும் கனரக வாகனங்களும் நாள்தோறும் சென்று வருகிறது. இந்த 6 வழிச்சலையின் கீழே பாலாறு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த நிலையில் படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் பாலாறு குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் வெளியேறுகிறது.
இதனால் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.