கடமலைக்குண்டுவில் குண்டும், குழியுமான சாலையில் விபத்து அபாயம்
கடமலைக்குண்டுவில் குண்டும், குழியுமான சாலையில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.;
கடமலைக்குண்டுவில், தேனி-வருசநாடு சாலையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக கடமலைக்குண்டு போலீஸ் நிலையம் மற்றும் ஈஸ்வரன் கோவில் முன்பு உள்ள தேனி-வருசநாடு சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்த பணிகள் முடிந்தபிறகு சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படவில்லை. இதனால் அந்த 2 இடங்களிலும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு பகுதியில் மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி, தார்சாலையை அரித்துவிடுகிறது. இதனால் மேலும் சாலை சேதமடைந்து வருகிறது. இவ்வாறு சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.