கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம்

கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-06-04 17:55 GMT

கொள்ளிடம், 

கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வலது கரை சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர், கிராமத்தில் இருந்து பாலூரான்படுகை, கொன்னக்காட்டுப்படுகை, கீரங்குடி, சரஸ்வதிவிளாகம், குத்தவக்கரை, சந்தப்படுகை, திட்டுப்படுகை, மகேந்திரப்பள்ளி வழியாக காட்டூர் வரை செல்லும் சாலை கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது.இந்த சாலையில் பராமரிப்பு பணிகள் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. சாலையை தொடர்ந்து பராமரிக்காமல் விட்டதால், தற்போது படுமோசமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினசரி அவதிப்பட்டு வருகிறார்கள்.

உடைப்புகள்

ஆற்றின் கரையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு இந்த சாலை முக்கிய வழித்தடம் ஆகும். இந்த நிலையில் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த காலங்களில் மழை பெய்தபோது சாலையில் ஏற்பட்ட உடைப்புகள் இதுவரை சீரமைக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் கிராம மக்கள் கூறுகிறார்கள்.

அபாயம்

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'வரும் மழைக்காலத்துக்குள் இந்த சாலையை மேம்படுத்த வேண்டும். தவறினால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பல இடங்களில் கரை உடையும் அபாயம் உள்ளது. சாலை சரியில்லாததால், அவசர காலங்களில் உரிய இடங்களுக்கு செல்ல முடியவில்லை. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்