குப்பைத்தொட்டிகளை அகற்றக்கோரி சாலை மறியல்

அருப்புக்கோட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குப்பைத்தொட்டிகளை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-07 20:41 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குப்பைத்தொட்டிகளை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியல்

அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலையில் கிளை தபால் அலுவலகம் முன்பு வாருகால் தோண்டி சீரமைப்பு வேலை நடைபெற்று வருவதாலும், அருகில் உள்ள கொண்டலாம்மன் கோவில் தெருவில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதாலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகள் கிளை தபால் நிலைய வாசலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகளை அப்புறப்படுத்த கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீரென விருதுநகர் சாலையில் குப்பைத் தொட்டிகளை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அருப்புக்கோட்டை - விருதுநகர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்