ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஏரிபுதூருக்கு மாற்றியதை கண்டித்து சாலை மறியல்
ஊனை வாணியம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம், ஏரிபுதூருக்கு மாற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊனை வாணியம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம், ஏரிபுதூருக்கு மாற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊராட்சி மன்ற அலுவலகம் மாற்றம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊனை வாணியம்பாடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கவுதமபுரம், நாராயணபுரம், ஏரி புதூர், ரெட்டியூர் உள்ளிட்ட கிராமங்கள் அடங்கியுள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகம் ஊனை வாணியம்பாடி கிராமத்தில் ஒடுகத்தூர் செல்லும் சாலை அருகே உள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்த அலுவலகம் மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பதாகவும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடைபெறக்கூடாது என்ற நோக்கத்திற்காக நாராயணபுரத்தை அடுத்த புத்துக்கோயில் அருகே ஒடுகத்தூர் செல்லும் சாலை ஓரம் ஏரிபுதூர் பகுதியில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சாலை மறியல்
புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறக்கப்பட்ட தகவல் ரெட்டியூர், ஊனை வாணியம்பாடி, கவுதமபுரம், நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தெரிந்தவுடன் திடீரென காலை 9 மணிக்கு உனை வாணியம்பாடியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் ஒடுகத்தூர்- வேலூர் சாலையில் 300-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
திறப்பு விழா நடந்து கொண்டிருக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென நடந்த இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பள்ளி கொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊனை வாணியம்பாடியிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மகளிர் சுயஉதவிக்குழு அலுவலகம்
விழா முடிந்து நந்தகுமார் எம்.எல்.ஏ. வேலுர் நோக்கி வந்தபோது மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசினார். அப்போது அவர்கள் எங்களுக்கு பழைய இடத்திலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே அலுவலகம் செயல்படும், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மகளிர் சுய உதவி குழுவுக்கான அலுவலகமாக செயல்படும் என எம்.எல்.ஏ. கூறினார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.