பசுமை பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
வேலூர் அருகே பசுமை பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் அருகே பசுமை பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பசுமை பூங்கா
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இலவம்பாடி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விவசாயிகள் விளை பொருட்களை பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு மரகத பூஞ்சோலை (பசுமை பூங்கா) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறையினர் அளவீடு செய்து அரசு நிலம் என்று தெரிவித்து அங்கு பசுமை பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.
இந்தநிலையில் அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த சில விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பசுமை பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இலவம்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய்த்துறையினரும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
அப்போது விவசாயிகள் கூறுகையில், நாங்கள் சுமார் 50 ஆண்டுகளாக இங்கு பயிரிட்டு வருகிறோம். வனத்துறைக்கு சம்பந்தப்பட்ட இடங்களிலோ அல்லது வேறு இடத்திலோ பசுமை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தாலுகா அலுவலகத்தில் இதுகுறித்து பேசிக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.