குடிநீர் தொட்டியை மீட்டு தரக்கோரி சாலை மறியல்
தரகம்பட்டி அருகே குடிநீர் தொட்டியை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வினியோகம்
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், வாழ்வார்மங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்துள்ளனர்.
இதையடுத்து வாழ்வார் மங்கலம் ஊராட்சி நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்த இடத்தை ஆய்வு செய்த போது அந்தப் பகுதியில் போதுமான அரசு நிலம் இல்லை என்பது தெரிய வந்தது.
இதனால் அண்ணாநகர் பகுதியில் வசித்த காத்தான் என்பவர் தனக்கு சொந்தமான ஒரு சென்ட் நிலத்தை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு தானமாக வழங்கினார். இதையடுத்து அந்த நிலம் ஊராட்சி மன்றத்தின் பெயரில் பட்டா மாற்றம் செய்து அதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
காலிக்குடங்களுடன் மறியல்
இந்நிலையில் காத்தான் குடும்பத்தினர் தற்காலிகமாக குடிநீர் இயக்க பணிகளையும் செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் காத்தான் குடுபத்தினர் தங்களுக்கு குடிநீர் இயக்கும் பணியினை நிரந்தரமாக வழங்கவில்லை என்றால் இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய விடாமல் குடிநீரை வெளியேற்றி வந்துள்ளனர். இதனால் கடந்த 23 நாட்களாக இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மீட்டு நிரந்தரமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பாளையம்-திருச்சி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்து வட்டார துணை ஆணையர் சுரேஷ், மைலம்பட்டி வருவாய் ஆய்வாளர் நெப்போலியன், வாழ்வார் மங்களம் ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த மறியலால் திருச்சி -பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.